கட்டாயமாக சட்டம்-ஒழுங்கு பணிக்கு மாற்றப்பட்ட போலீசாரை, மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்ற கோரிக்கை
கட்டாயமாக சட்டம்-ஒழுங்கு பணிக்கு மாற்றப்பட்ட போலீசாரை, மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாரில் 32 பேர் போலீஸ் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு பணிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் 3 பேரை தவிர்த்து 29 பேர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல ஆண்டுகளாக ஆயுதப்படையில் பணியாற்றி வந்ததாகவும், அவர்களை கட்டாயமாக போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் சக போலீசார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாரில் 49 பேர் தங்களை போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர்களில் 3 பேர் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட 29 பேரை மீண்டும் ஆயுதப்படையில் பணிபுரிய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்டில் போலீஸ்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆயுதப்படையில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஏட்டு ஒருவர் தற்போது விருப்ப ஓய்வுக்கு எழுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு டாக்டரான அவருடைய மனைவி உடல்நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். தற்போது அந்த ஏட்டு போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதால் அவரது மனைவியை சரியாக கவனித்து கொள்ள முடியவில்லை என்றும், இதனால் அவரது மகள் பள்ளிக்கு செல்லாமல் தாயை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான போலீஸ் ஏட்டு விருப்ப ஓய்வுக்கு எழுதி கொடுத்தாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கட்டாயமாக போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் போலீசாரை மீண்டும் ஆயுதப்படையில் பணிபுரிய உத்தரவிட வேண்டும் என்பதே போலீசாரின் கோரிக்கையாக உள்ளது.