கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையம்
தஞ்சை ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி வேலைப்பாடு கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையத்தை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி வேலைப்பாடு கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையத்தை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திறந்து வைத்தார்.
உள்ளூர் கைவினைப்பொருட்கள்
2022-23-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் "ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு பொருள்" என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத்திட்டத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்கள், கலை பொருட்கள் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் அதற்கான விற்பனை அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரெயில் நிலையங்களில் அந்தந்த உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 6 ரெயில்வே கோட்டங்களில் முதற்கட்டமாக கோட்டத்துக்கு ஒன்று வீதம் 6 ரெயில்வே கோட்டங்களில் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம்
அதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கீழ் இந்த திட்டத்தில் தஞ்சாவூர் ரெயில்வே நிலையம் தேர்வு செயப்பட்டது. தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் தஞ்சை ரெயில் நிலையத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் தஞ்சையின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இந்த கைவினைப்பொருட்கள் விற்பனை பிரத்தியேக நிலையத்தை நேற்று காலை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், அரங்க ஒருங்கிணைப்பாளர் ஓவியர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெட்டி கைவினைப்பொருட்கள்
இதில் நெட்டியால் தயார் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சிலை, ராஜ ராஜ சோழனுடன் கூடிய பெரிய கோவில், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீராமர், நாகூர் தர்கா, முனீஸ்வரன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் கோபுரங்கள் மற்றும் நெட்டியால் தயார் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
இதனை ரெயில்வே நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு நெட்டியால் தயார் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
ரூ.35 ஆயிரம் வரை
இது குறித்து தஞ்சை ரெயில் நிலையத்தில் நெட்டி விற்பனை நிலையம் வைத்துள்ள தஞ்சையை சேர்ந்த தம்பதியான ராதா- எழில்விழி கூறுகையில், “ மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் எங்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை நெட்டியின் புகழ் வெளியூர், வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கும் தெரியவரும். இந்த அரங்கில் ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள நெட்டியால் தயார் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
15 நாட்கள் செயல்படும்
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரெயில்வே கோட்டத்துக்கு ஒரு ரெயில்வே நிலையம் வீதம் தமிழகத்தில் 6 ரெயில்வே நிலையங்களில் உள்ளூர் பொருட்களின் விற்பனை நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி கோட்டத்தில் தஞ்சை ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டு புவிசார் குறியீடு பெற்ற நெட்டி கைவினை பொருட்கள் விற்பனை மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மையம் இன்னும் 15 நாட்களுக்கு ரெயில் நிலையத்தில் செயல்படும். அதன் பின்னர் அவற்றை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் மற்ற ரெயில்வே நிலையங்களிலும் கைவினைப் பொருட்கள், கலைப்பொருள் விற்பனை அரங்கு தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்படித் தொடங்கும் பட்சத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ள ஊரில் எந்த பொருள் சிறப்பு வாய்ந்ததோ அந்தப் பொருள் விற்பனைக்காக வைக்கப்படும். இதன் மூலம் கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். மேலும் உள்ளூர் கலைப்பொருட்களை நாடறிய செய்ய முடியும்”என்றனர்.