சேலத்தில் தொழில் அதிபரின் வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் மோசடி
சேலத்தில் தொழில் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில் அதிபர்
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 53). தொழில் அதிபரான அவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், உங்களது வங்கிக்கணக்கு எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் அது முடக்கம் செய்யப்படும் என்றும், இதை தவிர்க்க கீழே உள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பும் படியும் கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் கதிரேசன் அந்த குறுஞ்செய்தியில் இருந்த லிங்கை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அதில் கேட்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், பான் கார்டு எண் மற்றும் செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் குறிப்பிட்டார்.
ரூ.2½ லட்சம் மோசடி
இதையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து 3 தவணையாக ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 991 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மோசடி குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.