மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணைய மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
சேலம்:-
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணைய மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
பேச்சுப்போட்டி
மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி சேலம் சோனா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆணையத்தின் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர்களாக எழுவோம், தலைநிமிர்ந்து நிற்போம் என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இதுவரை 25 மாவட்டங்களில் நடத்தி முடித்துள்ளோம். எஞ்சிய மாவட்டங்களில் முடித்த பிறகு இறுதிச்சுற்று சென்னையில் நடைபெறும்.
கைவிட வேண்டும்
ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழி இருக்க வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் இருக்கின்ற மாணவர்களையும், இளைஞர்களையும் 2-ம் தர குடிமக்களாக ஆக்க கூடியதாக இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழி படிக்க கூடிய கட்டாயத்தை உண்டாக்குகின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து இந்தி பேசாத மாணவர்களை வெளியே தள்ளுவதற்கான முயற்சியாகும்.
இந்தி படித்தால்தான் மத்திய அரசு பணியில் நுழைய முடியும் என்ற நிலைப்பாட்டை காட்டுகிறது. ஆங்கிலக்கல்வி படித்ததால் தான், உலகம் முழுவதும் சென்று இந்திய மாணவர்கள் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்கள். அதுபோன்ற கல்வி மாணவர்களுக்கு கிடைக்க கூடாது என மத்திய அரசு நினைக்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. ஆங்கில அறிவு இல்லாமல் இந்தியை மட்டும் வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியாது. ஆகையால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஒன்றிணைக்க வேண்டும்
65 சதவீத மக்கள் பா.ஜனதா கட்சியை வேண்டாம் என்று நினைக்கின்றனர். 35 சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு அளிக்கிறார்கள். எனவே 65 சதவீத மக்களையும் ஒன்று திரட்டி ஒன்றிணைக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். அந்த கருத்தை தான் ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் சாரதா தேவி, சோனா கல்லூரி குழும தலைவர் வள்ளியப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.