பாடையில் பிணமாக வந்து பக்தர் நூதன நேர்த்திக்கடன்
மாரியம்மன் காளியம்மன் கோவிலில் பாடையில் வந்து பக்தர் நூதன நேர்த்திக்கடன் செலுத்தினார்.
கொண்டலம்பட்டி:-
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர் ஒருவர் நூதன முறையில் தனது நேர்த்திக்கடனை செலுத்தினார். அதாவது அந்த பக்தர் பாடையில் பிணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். இதற்காக கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பந்தல் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பிணம் போன்று படுத்து இருந்த பக்தருக்கு, அனைத்து இறுதி சடங்குகளையும் செய்தனர். மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை போல் வந்து கலந்து கொண்டனர். பின்னர் பாடையில் பக்தரை வைத்து இறுதி ஊர்வலமாக தெருத்தெருவாக கொண்டு சென்றனர். கொண்டலாம்பட்டியில் உள்ள மயானத்திற்கு சென்று அங்கு ஒரு கோழியை மட்டும் புதைத்து விட்டு, பின்னர் அனைவரும் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் உள்பட அவருடன் வந்தவர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.