பொத்தனூரில் சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த அமைதி பேச்சுவார்த்தை-தாசில்தார் தலைமையில் நடந்தது

பொத்தனூரில் சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் தலைமையில் நடந்தது.

Update: 2022-04-09 18:53 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தேவராயசமுத்திரத்தில் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து பங்குனி திருவிழா நடத்துவது வழக்கம். அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் விழாக்குழுவில் நிர்வாகிகளாக உள்ளனர். இந்த கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக நிரந்தர தீர்வு எட்டும் வகையில் கடந்த 2018‌-ம் ஆண்டு இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. அதன்படி 2019-ம் ஆண்டு பழைய முறைப்படி அனைத்து சமுதாயத்தை சேர்ந்த காரியக்காரர்கள் முன்னிலையில் திருவிழா நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. 
இந்நிலையில் பழைய பாரம்பரிய முறைப்படியும், ஐகோர்ட்டு உத்தரவுப்படியும் திருவிழா நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து திருவிழாவில் எவ்வித தடங்கலும், அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க அனைத்து சமுதாய நிர்வாகிகளையும் ஒருங்கிணைந்து செயல்பட பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 7 சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தரப்பினர் கோவில் திருவிழா தொடர்பாக உள்ள அனைத்து வரவு, செலவு கணக்குகளையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும், வருங்காலத்தில் திருவிழா கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் முடிவு எட்டப்படாததால் மீண்டும் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வருவாய்த்துறைத்துறையினர் தெரிவித்தனர். கூட்டத்தில், பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், கோவில் செயல் அலுவலர் சிவகாமி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்