விராமதி, ஜெயங்கொண்டநிலையில் மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து மகிழ்ந்த கிராமத்தினர்
விராமதி, ஜெயங்கொண்டநிலை கிராமங்களில் நடந்த மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.
சிங்கம்புணரி, -
விராமதி, ஜெயங்கொண்டநிலை கிராமங்களில் நடந்த மீன்பிடி திருவிழாவில் மீன்களை பிடித்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.
ஜெயங்கொண்ட நிலை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட மயில்ராயன்கோட்டை நாடு என்றழைக்கப்படும் ஜெயங் கொண்ட நிலை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடை பெற்றது. இந்த கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் நிலப் பரப்பில் கருமாத்து கண்மாய் உள்ளது.
இந்த கண்மாய் மூலம் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் தூர்வாரப்பட்டு கடந்த காலங்களில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பி இந்த பகுதியில் கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செழித்தது.
தற்போது கண்மாய் வற்றிய நிலையில் வருங்காலத்தில் தொடர் மழை பெய்ய வேண்டியும், கண்மாய் நிரம்பவும் மீன்பிடி திருவிழா நடத்த கிராமத்தார்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
மும்முரம்
இதில் கொட்டகுடி, மேலூர் கீழவளவு, திருப்பத்தூர், கொங்கம்பட்டி, கரடிப்பட்டி, மதகுபட்டி, வடவன்பட்டி, ஏரியூர், மல்லாக்கோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாலை வேளையில் கண்மாய் கரைக்கு வந்தடைந்தனர்.
மீன்பிடியாளர்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் கிராம பெரிய அம்பலக்காரர் குணசீலன், அம்பலக்காரர் கிராமத் தின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு அழைத்துவரப் பட்டார். அவர் கண்மாய் கரையில் நின்று பச்சைக் கொடியை அசைத்ததும் கிராம மக்கள் கண்மாய் தண்ணீரில் குதித்து ஓடிய மீன்களை பலவகை வலைகளை விரித்து மீன்களை பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
ஏற்பாடு
ஒரு சில பெண்கள் மூங்கில் கூடைகளை கொண்டு அந்த மீன்களை பிடித்து அதில் போட்டனர். மீன்பிடியாளர்கள் விரித்த வலையில் கெண்டை மீன், அயிரை, கெண்டை பொடி, விரால் மீன்கள், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கிலோ மீன்கள் மட்டுமே கிடைத்தன. வலையில் சிக்கிய மீன்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று மீன் குழம்பு வைத்து சாப் பிட்டனர். ஏற்பாடுகளை கிராம பெரிய அம்பலக்காரர் மற்றும் கரை அம்பலகாரர்கள் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
விராமதி
திருப்பத்தூர் அருகே விராமதி கிராமத்தில் உள்ள பேய்கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கிய நிலையில் கண்மாய் பராமரிப்பு மற்றும் கிராம பொது தேவைக்கு நிதி திரட்டும் வகையில்மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இதை யடுத்து விராமதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங் களான கீழச்சீவல்பட்டி, அழகாபுரி, நெல்லூர் குளத்துப்பட்டி, திருமயம் உள்ளிட்ட ஏராளமான பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்று அதிகாலை 5 மணி முதல் அந்த கண்மாய்க்கு பாரம்பரிய முறைப்படியான ஊத்தா என்று அழைக்கப்படும் மீன்பிடி கூடையுடன் காத்திருந்தனர்.
அதன்பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கொடிசைத்தவுடன் கூடைகளுடன் காத்திருந்த கிராம மக்கள் வேகமாக ஓடி சென்று கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இவ்வாறு மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கட்லா, விரால், பொட்லா, ஜிலேப்பி, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. மீன்பிடி விழாவில் கலந்துகொண்ட அனை வருக்கும் குறைந்தது 2 கிலோவிற்கும் மேல் மீன்கள் கிடைத்தன.