கடல் பசுக்களை அழித்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
கடல் பசுக்களை அழித்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
தொண்டி,
கடல் பசுக்களை அழித்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
அபூர்வ வகை
தொண்டியில் செயல்பட்டு வரும் இந்திய வன உயிர் நிறுவன கடல் ஆராய்ச்சியாளர் டாக்டர் மது மகேஷ் கூறியதாவது:- கடல் பசு ஒரு அபூர்வ வகையான பாலூட்டி இனத்தை சேர்ந்தது. ஒரு கடல் பசு 350 கிலோ முதல் 500 கிலோ வரை எடை இருக்கும். தமிழ்நாட்டில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மட்டுமே இந்த அபூர்வ வகை கடல் பசுக்கள் உயிர்வாழ்கின்றன.
72 வயது வரை உயிரோடு வாழும் இந்த கடல் பசுக்கள் 17 ஆண்டுகளுக்கு பிறகுதான் பருவத்தை அடைந்து குட்டி போடும். 6 ஆண்டுகளுக்கு பின்னரே அடுத்த குட்டி போடும். கடலில் உள்ள புற்களை மட்டுமே உணவாக சாப்பிட்டு உயிர் வாழக்கூடிய கடல் பசுக்கள் மற்ற மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
விழிப்புணர்வு
தமிழகத்தில் கடல் பசுக்களை பாதுகாக்க பாதுகாப்பு படலங்கள் அரசால் உருவாக்கப்பட்டு அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் தமிழக கடலோரங்களில் குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் கடல் பசு குறித்த விழிப்பு ணர்வை மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் மீனவர்களின் வலையில் சிக்கிக்கொள்ளும் கடல் பசுக்களை எவ்வாறு விடுவிக்க வேண்டும் என்பது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மீனவர்கள் வலையில் சிக்கிக்கொண்டால் அவர்கள் அந்த வலையை உடனடியாக அறுத்து கடல் பசுக்களை உயிரோடு கடலிலேயே விட்டு விடுவார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மீனவர்களுக்கு நாங்கள் 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கி வருகிறோம். அதற்கான சான்று மற்றும் சேதமடைந்த வலைக்கான தொகையும் வழங்கப்படுகிறது. கடல் பசுக்கள் 4 வகையாக பாதிக்கப்படுகின்றன. ஒன்று கடல் கரை ஓரங்களில் மீன் பிடிப்பின்போது அந்த படகுகளில் அடிபட்டு கடல் பசுக்கள் இறந்து விடுகிறது.
வாழ்வாதாரம்
சுற்றுச்சூழல் பாதிப்பினால் இறக்கிறது. முக்கியமாக வேட்டையாடுதல் மூலமும் இது போன்ற கடல் பசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கடல் பசுக்களை அழித்தால் மீனவர்களின் வாழ்வாதாரமே பெரிய அளவில் பாதிக்கப்படும்.
சிலர் பணத்துக்காக வேட்டையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவர்கள் கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.