சமரச மையத்தில் காணப்படும் தீர்வுகளுக்கு மேல்முறையீடு கிடையாது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் பேச்சு
சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது, அதற்கு மேல்முறையீடு கிடையாது என்று தர்மபுரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் பேசினார்.
தர்மபுரி:
சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது, அதற்கு மேல்முறையீடு கிடையாது என்று தர்மபுரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் பேசினார்.
சமரச தீர்வு
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும் சமரச மையத்தின் சார்பில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற சமரச தீர்வு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தையும், பஸ் நிலையத்தில் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் பேசியதாவது:-
நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் சமரச தீர்வு காணக்கூடிய தனிநபர் தகராறு, சொத்து பிரச்சினை, தொழிலாளர் நலம், பணம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமரச மையத்தில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டால் முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம்.
மேல்முறையீடு கிடையாது
அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன. சமரசம் மூலம் வழக்குகளை விரைவாக கையாண்டு சுமுகமான தீர்வுகளை கட்டணம் இல்லாமல் காணமுடியும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது. அதற்கு மேல்முறையீடு கிடையாது. வழக்குகளுக்கு சமரச தீர்வு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் முறை மூலம் பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி மணிமொழி, மாவட்ட கூடுதல் நீதிபதி மோனிகா, மாவட்ட விரைவு மகளிர் நீதிபதி சையத் பக்ரத்துல்லா, மாவட்ட குடும்ப நல நீதிபதி செல்வமுத்துக்குமாரி, நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ராஜா, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், விபத்து வழக்குகள் தீர்ப்பாய சார்பு நீதிபதி மைதிலி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி கலைவாணி, முதன்மை சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி மோகனரம்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சாந்தி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் வனிதா, மருது சண்முகம், தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் சிவகுமார், சட்டப்பணிகள் குழு வக்கீல்கள் ராஜேந்திரன், அருள்ஜோதி, மணிவண்ணன், நீதிமன்ற ஊழியர்கள், அரசு கல்லூரி மாணவ-மாணவிகள், அரிமா சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.