காவேரிப்பாக்கம் அருகே தந்தை-மகன் வீடுகளில் நகை-பணம் திருட்டு

காவேரிப்பாக்கம் அருகே தந்தை-மகன் வீடுகளில் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-04-09 16:48 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அருகே தந்தை-மகன் வீடுகளில் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

நகை பணம் திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டை சேரி ஒத்தவாடை தெருவை சோ்ந்தவர் அன்னியப்பன் (வயது 75) விவசாயி. இவருடைய மனைவி தெய்வானை (70). இவா்கள்  இரவு வீட்டை பூட்டி விட்டு முன்பக்க வராண்டாவில் தூங்க சென்றுள்ளனர்.  இவா்களுடன் அதே பகுதியை சேர்ந்த ஆதரவற்ற பெண் தேசம்மாள் (58) என்பவரும் தூங்கியுள்ளார். 

நேற்று காலை அன்னியப்பன் வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது உள்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் திருட்டு போயிருந்தது. தேசம்மாள் என்பரின் இரும்பு பெட்டியில் வைத்திருந்த ஆதார் அட்டை, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றையும் மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனர்.

மகன் வீடு

அதேபோல் அன்னியப்பனின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது மகன் ரமேஷ் (40) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மா்மநபா்கள் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் ½ பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்