பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி,
பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆங்கிலத்துறை பாடத்திட்டத்தில் பணியாற்றும் துணைப்பேராசிரியர் மகேந்திரன் (வயது 59) என்பவர் ஆங்கிலம் பயிலும் 3-ம் ஆண்டு மாணவி ஒருவரை நட்புடன் பழகலாம் வீட்டிற்கு வா என தொலைபேசியில் பேசிய சம்பவம் சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து நேற்று முன்தினம் பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் துணைப்பேராசிரியர் மகேந்திரனை கைது செய்தனர். பின்னர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று கூடி திருவொற்றியூர் பொன்னேரி நெடுஞ்சாலையில் துணைப்பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரியில் குழு அமைக்க வேண்டும் எனக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.