தினத்தந்தி செய்தி எதிரொலி முதுவார்குடி மலைக்கிராமத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியால் போடி அருகே உள்ள முதுவார்குடி மலைக்கிராமத்தில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-09 15:48 GMT
தேனி:

முடங்கிய பணிகள்

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் முதுவார்குடி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு குரங்கணியில் இருந்து கரடு முரடான மலைப்பாதையில் ஜீப்களில் அல்லது நடந்து தான் செல்ல முடியும். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்தன. அதை சீரமைக்க வேண்டும் என்றும், வீடற்றவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு 14 பசுமை வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், கட்டுமான பணிகள் பல மாதங்களாக முடங்கின. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் அந்த கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பிறகு ஓரிரு நாட்கள் மட்டுமே பணிகள் நடந்தது. பின்னர், மீண்டும் பணிகள் முடங்கின.
கலெக்டர் ஆய்வு
இதனால் மலைவாழ் மக்கள் குடிசை அமைத்து அதில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் படும் துயரங்கள் குறித்து 'தினத்தந்தி'யில் நேற்று  செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் முரளிதரன் முதுவார்குடி கிராமத்துக்கு அதிகாரிகள் குழுவினருடன் இன்றுஜீப்பில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டும் பணி முடங்கிக் கிடப்பதை பார்வையிட்டார். இதையடுத்து அந்த வீடுகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு சாலை வசதி, பூட்டிக்கிடக்கும் பள்ளிக்கூடத்தை மீண்டும் திறந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். அப்போது குரங்கணியில் இருந்து இந்த கிராமத்துக்கு கற்சாலை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, தாசில்தார் செந்தில்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகரன், அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்