மூதாட்டியை கம்பியால் தாக்கி 2 பவுன் சங்கிலி பறிப்பு
நன்னிலம் அருகே மூதாட்டியை கம்பியால் தாக்கி 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்னிலம்:-
நன்னிலம் அருகே மூதாட்டியை கம்பியால் தாக்கி 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூதாட்டி மீது தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மலர் (வயது60). இவர் மாடி வீட்டில் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் செந்தில்குமார் (38) மேல் தளத்தில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மலர் வாசல் கதவை திறந்து வைத்து விட்டு தனியாக தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு திடீரென்று அவருடைய அலறல் சத்தம் கேட்டது.
இதனால் வீட்டின் மேல் தளத்தில் இருந்து செந்தில்குமார் ஓடி வந்து பார்த்தபோது, மலர் தலையில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மலரை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நன்னிலம் போலீசில் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.