குமரி மாவட்டத்தில் கோடை மழையால் தேன் உற்பத்தி பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கோடை மழையால் தேன் சீசனில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேனீ வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் கோடை மழையால் தேன் சீசனில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேனீ வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்
குமரி மாவட்டம் தேன் உற்பத்திக்கு உகந்த மாவட்டமாக உள்ளது. இங்குள்ள வனங்களும், ரப்பர் தோட்டங்களும் தேன் உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
ரப்பர் தோட்டங்களில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் தேனீக்களை வைத்து தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தேனீ வளர்ப்போர் மற்றும் தேன் உற்பத்தி சார்ந்த தொழில்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் கிலோ தேன் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாகவும், தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள் வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உற்பத்தி பாதிப்பு
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ரப்பர் மரங்களில் புதிய இலைகள் துளிர் விட்டு வளரும். இந்த 3 மாதங்களும் தேன் சீசன் காலமாக கருதப்படுகிறது. நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை அடிக்கடி மழை பெய்து வருகிறது.
இதனால், ரப்பர் மரங்களில் இலைக்கணுக்களில் சுரக்கும் தேனை மழைநீர் அடித்து செல்கிறது. மேலும், மழையின் காரணமாக தேனீக்கள் கூடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தேன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தேனீ வளர்ப்போருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இழப்பு
இதுகுறித்து குலசேகரம் கொச்சுவீட்டுப்பாறை பகுதியை சேர்ந்த தேனீ வளர்ப்பாளர் தோமஸ் கூறியதாவது:-
நடப்பாண்டில் சீசன் காலத்தில் பெய்து வரும் மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு தேன் பெட்டியிலுள்ள தேனீக்களுக்கு சீசன் இல்லாத 9 மாதங்களுக்கு 8 கிலோ சர்க்கரைப்பாகு உணவாக கொடுக்க வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ரூ.320 செலவாகும். இது தவிர வாரம் தோறும் பெட்டி பராமரிப்பு, தேனை பதப்படுத்துதல், தொழிலாளர் கூலி என பல்வேறு செலவினங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 1 பெட்டியிலிருந்து ஆண்டுக்கு 7 கிலோ தேன் கிடைக்க வேண்டும். நடப்பாண்டில் 1 பெட்டியிலிருந்து சராசரியாக 1½ கிலோ தேன் மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மொத்தமாக கொள்முதல் செய்பவர்கள் கிலோவிற்கு ரூ.150 என்ற அளவிலேயே கொள்முதல் செய்கின்றனர். தேனுக்கு கிடைக்கும் விலை உற்பத்தி செலவுக்கு கூட போதுமானதாக இல்லாததால் தேனீ வளர்ப்போருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
எனவே தமிழக அரசின் தோட்டக்கலை துறை தேனீ வளர்ப்போரின் துயர் துடைக்கும் வகையில் தேன் கூடுகளை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்கவும், கொள்முதல் விலையை ரூ.250 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாநில அரசு தேனீ வளர்ப்பு தொழிலுக்கு வழங்கும் நிதிகள் உண்மையான தேனீ வளர்ப்போருக்கு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுக்கடன்
குமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்க செயலாளர் ஜூடஸ்குமார் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக சீசன் காலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் தேனீக்களுக்கு ஏற்படும் நோய் தாக்குதல் காரணமாக போதிய அளவில் தேன் கிடைக்காமல் தேனீ வளர்ப்போர் பெரும் இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தேனீ வளர்போருக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு முன்வர வேண்டும்.
மேலும், திருவட்டார் தாலுகா தேனீ வளர்ப்போரை, மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் இணைத்து அவர்களின் தேனை கொள்முதல் செய்வதுடன், அரசின் நலத்திட்டங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். தேனீ வளர்ப்போருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆண்டு கடன் வழங்கி அதற்கு ஈடாக தேனை கொள்முதல் செய்யவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேனீ வளர்ப்போருக்கு மலிவு விலையில் சர்க்கரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.