சரத்பவார் வீடு மீது தாக்குதல் நடத்திய 110 பேர் கைது
சரத்பவார் வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் வக்கீல், போக்குவரத்து கழக ஊழியர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
சரத்பவார் வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் வக்கீல், போக்குவரத்து கழக ஊழியர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரத்பவார் வீட்டில் தாக்குதல்
மராட்டியத்தில் மாநில போக்குவரத்து கழகத்தை, அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் அதன் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு திரும்பிவிட்ட நிலையில், ஒரு பகுதியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் வருகிற 22-ந் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சரத்பவாரின் வீட்டை நோக்கி செருப்பு, கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல இந்த போராட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க சரத்பவார் தவறிவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் சரத்பவாரின் வீடு மீது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
110 பேர் கைது
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 102 பேரை நேற்று இரவு கைது செய்தனர். இதில் 79 பேர் ஆண்கள். 23 பேர் பெண்கள். இதேபோல பஸ் ஊழியர்களின் வக்கீல் குணரத்னா சதாவர் தேவையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்தநிலையில் இன்று போலீசார் சரத்பவார் வீடு மீதான தாக்குதல் தொடர்பாக மேலும் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மும்பை எஸ்பிலன்டே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதற்கிடையே போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை அடுத்து சரத்பவாரின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், எஸ்.ஆர்.பி.எப். படையினர் அவரது வீட்டின் முன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல சரத்பவார் வீட்டுக்கு செல்லும் பாதை தடுப்பு மூலம் அடைக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு தான் விருந்தினர்கள் உள்பட அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.