பூண்டு அறுவடையை தள்ளிபோடும் விவசாயிகள்

கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால், பூண்டு அறுவடையை விவசாயிகள் தள்ளிபோட்டு உள்ளனர்.

Update: 2022-04-09 13:56 GMT
கோத்தகிரி

கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால், பூண்டு அறுவடையை விவசாயிகள் தள்ளிபோட்டு உள்ளனர். 

மலைக்காய்கறிகள் சாகுபடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர். 

விலை வீழ்ச்சி

நீலகிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருப்பதால் நீலகிரி பூண்டுக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் தங்களது தோட்டங்களில் ஆர்வத்துடன் பூண்டு பயிரிட்டனர். அவை தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் காய்கறி மண்டிகளில் பூண்டு கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளதால், அறுவடை செய்வதை தாமதித்து வருகின்றனர். அவர்கள் கொள்முதல் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அறுவடை தாமதம்

இதுகுறித்து பூண்டு பயிரிட்டு உள்ள விவசாயிகள் கூறியதாவது:-
கொரோனா காலத்தில் கூட பூண்டு கிலோவுக்கு சராசரியாக ரூ.200 முதல் ரூ.300 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்தது. தற்போது காய்கறி மண்டிகளுக்கு பூண்டு வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக சிறிய பூண்டு கிலோவுக்கு ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தரமான பூண்டு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.60-க்கு கொள்முதல் செய்யபடுகிறது. 

தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். தற்போது பூண்டின் கொள்முதல் விலை வெகுவாக குறைந்து உள்ளதால், அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கொள்முதல் விலை உயருமா? என்கிற எதிர்பார்ப்பில் அறுவடைக்கு தயாராகியும் கூட பயிர்களை அறுவடை செய்யாமல் தாமதித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்