வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மேளதாளங்கள் முழங்க கருடன் படம் வரையப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 9.51 மணிக்கு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) யாழி வாகனத்திலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) அனுமந்த வாகனத்திலும் பெருமாள் புறப்பாடாகிறார். 11-ந்தேதி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12-ந்தேதி சேஷ வாகனத்திலும், 13-ந்தேதி யானை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 14-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுகிறார். 15-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 16-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். இதைத்தொடர்ந்து 10.35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.