சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருமங்கலம் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கவுன்சிலர்கள் கூட்டம்
திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் டேரன்ஸ் லியோன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. கவுன்சிலர் உட்பட 27 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் நகராட்சி பொறியாளர் ரத்தினவேலு தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்னாள் நகரமன்ற தலைவரும் அ.தி.மு.க. கவுன்சிலர் உமா விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு
அப்போது அவர் கூறும் போது, மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் சொத்து வரி உயர்வு மேலும் பாதிப்பை உண்டாக்கும். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். தற்போது சுத்தம் இல்லாத குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன்அதியமான் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து 2-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பாண்டியன் புதிதாக நகர்மன்றத்தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் அதிகாரிகள் தன்னிச்சையாக திட்டப் பணிகளுக்கான டெண்டர் அறிவித்தது நியாயமற்றது. இந்த டெண்டரை மீண்டும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்களும்ஆதரவு தெரிவித்தனர். இதை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்தனர்.
வெளிநடப்பு
இந்த நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக எழுந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் அதிகாரிகள் முன்னிலையில் சொத்து வரி உயர்வுக்கும் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் நடந்த கூட்டத்தில் திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி உயர்வை அமல்படுத்துவது மக்களுக்கு தினந்தோறும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பது, கழிவுநீர் தேங்காத வண்ணம் கால்வாய்களை சுத்தம் செய்வது, திருமங்கலம் நகராட்சி பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை நிறுவ ஏற்பாடு செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.