பெங்களூருவில் பதுக்கிய ரூ.37 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.37 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
கமல்பந்த் பார்வையிட்டார்
பெங்களூரு கோவிந்தபுரா போலீசார் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை மீட்டனர். அந்த போதைப்பொருட்கள் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த போதைப்பொருட்களை நேற்று மதியம் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபாகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது கமல்பந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கைது
பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கோவிந்தபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ரஜீத் பானுகுப்தா(வயது 24), தமிழ்நாடு காஞ்சீபுரம் மாவட்டம் முடிச்சூர் அருகே வரதராஜபுரம் 7-வது கிராசை சேர்ந்த அந்த்ரன் கோம்ஸ்(59), ராஜேஷ்(35) என்பதாகும். இவர்கள் 3 பேரும் பெங்களூரு, தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போதைப்பொருட்களை விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார்கள்.
ரூ.37 கோடி போதைப்பொருட்கள்
பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறவனங்களில் பணியாற்றுபவர்கள், சிறு, சிறு வியாபாரிகளுக்கும் போதைப்பொருடகளை 3 பேரும் விற்பனை செய்து வந்துள்ளனர். இதுதவிர பெங்களூருவில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்திருக்கிறார்கள். கோவிந்தபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எச்.பி.ஆர். லே-அவுட், 5-வது ஸ்டேஜ், 1-வது பிளாக் பகுதியில் வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற போது 3 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தாா்கள். 3 பேர் மீதும் கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.35 கோடி மதிப்பிலான மோதாகியூலோன், 6½ கிலோ எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள், 75 கிராம் கொகைகன், 300 கிராம் ட்ரோமோல் என்ற வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் ஒட்டு மொத்த மதிப்பு ரூ.37 கோடி ஆகும்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.