மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி டிராவல்ஸ் உரிமையாளர் சாவு

நெல்லை அருகே டயர் வெடித்ததால் கார் மேம்பால தடுப்பு சுவரில் மோதியதில் டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-08 20:38 GMT
நெல்லை:
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்குமார் (வயது 28). இவர் டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜீவ்குமார் தனது நண்பர்கள் சிலருடன் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று காலை தூத்துக்குடிக்கு அதே காரில் புறப்பட்டனர். காரை அவருடைய நண்பர் ஓட்டினார். ராஜீவ்குமார் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியை கடந்து சிவந்திபட்டி விலக்கு மேம்பாலம் பகுதியில் வந்தபோது காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதில் காரின் பின்பகுதி, தடுப்பு சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் கதவு திறக்கப்பட்டு காரில் இருந்த ராஜீவ்குமார் வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரின் பின்பகுதி சேதம் அடைந்தது. விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்