மீன்பிடி தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும்

மீன்பிடி தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-08 20:30 GMT
சேதுபாவாசத்திரம்;
மீன்பிடி தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மீன்பிடி தடைக்காலம்
தஞ்சை மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக் காலம் வரும் ஏப்ரல் 16-ந் தேதி(சனிக்கிழமை)தொடங்கி, ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்படுகிறது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் மீன்பிடி, இறங்கு தளங்கள் உள்ளன.
தஞ்சை மாவட்டத்தில், சுமார் 146 விசைப்படகுகளும், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீ்ன்பிடிதடைக் காலத்தில் மீனவர்களின் குடும்பத்துக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.5  ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
61 நாட்கள்
நாட்டுப்படகுகளுக்கு மீன் பிடிக்கத் தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் மல்லிப்பட்டிணம் தாஜூதீன் கூறியதாவது மீன்களின் இனப்பெருக்க காலம் என கூறி தடைக் காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்றால், ஒரு சில தினங்கள் மட்டுமே அதிக அளவில் மீன்கள் பிடிபடுகின்றன. 
தற்போது கோடைக்காலத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் என்பதை மாற்றி, ஏப்ரல் 15 முதல் மே 15 வரை ஒரு மாதமும், அதிக மழை, புயல், இயற்கை சீற்றம் ஏற்படும் நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரை என ஒரு மாதமும் இரண்டு தடவையாக மீன்பிடி தடைக் காலத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
ரூ.20 ஆயிரம் வழங்க கோாிக்கை
தடைக் காலத்தில் படகுகளை செயல்படுத்தாமல் கட்டி வைப்பதால், 2 மாதம் கழித்து மீண்டும் படகுகளை, இயக்கும்போது பராமரிப்பு பணிக்காக ரூ.2 லட்சம் ரூபாய்வரை செலவி்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.  தடைக் காலம் முடிந்த பின் மீனவர்கள் தங்கள் படகுகளை, பழுது நீக்கம் செய்து, செயல்படுத்த வசதியாக குறைந்த வட்டி விகிதத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஓராண்டு தவணையில் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
சி.ஐ.டி.யூ. மீன்பிடி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பெரியண்ணன், நாகேந்திரன் ஆகியோர் கூறியதாவது:-
தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அரசு தடைக்கால நிவாரண உதவியை அதிகரித்து வழங்க வேண்டும். அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம்  மீன்பிடித் தொழிலாளர்களுக்கு கட்டுப்படி ஆகாது. எனவே மீன்பிடி தடைக்காலத்திற்கு, ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். எனவே அரசு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்