மதுபோதையில் மகன் தாக்கிய அவமானத்தில் தொழிலாளி தற்கொலை

திருவட்டார் அருகே மதுபோதையில் மகன் தாக்கியதால் அவமானம் அடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-08 19:56 GMT
திருவட்டார்:
திருவட்டார் அருகே மதுபோதையில் மகன் தாக்கியதால் அவமானம் அடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். 
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தொழிலாளி
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூர் கொற்றன்விளையை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 57), தொழிலாளி. இவருடைய மனைவி கலா (48). இவர்களுக்கு அஜித், அஜின் என 2 மகன்கள் உள்ளனர். இதில் அஜித் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 
அஜின்  மேக்காமண்டத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அஜினுக்கு 2½ மாதங்களுக்கு முன் மோனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 
மகன் தாக்குதல்
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் செல்லத்துரையும், அஜினும் மதுகுடித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஈடுபட்டதாகவும், அப்போது செல்லத்துரையை மகன் அஜின் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகும் தந்தை-மகன் தகராறு ஓயவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த கலா அருமனை அருகே மணலியில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்று விட்டார். அதே போல் மோனிஷாவின் குடும்பத்தினர் அவரை திங்கள் நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
தற்கொலை
இந்த சம்பவத்துக்கு இடையே வீட்டில் செல்லத்துரையும், அஜினும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை செல்லத்துரை ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடப்பதாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ விரைந்து வந்து செல்லத்துரையின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், செல்லத்துரையின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது உடலில் விஷத்தின் தன்மை இருப்பது தெரியவந்தது. எனவே மகன் தன்னை தாக்கியதால் மனமுடைந்த செல்லத்துரை விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
மகன் கைது
இதற்கிடையே தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய மகன் அஜினை போலீசார் கைது செய்தனர். 
மதுபோதையில் மகன் தாக்கிய வேதனையில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்