நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-04-08 19:40 GMT
மதுரை, 

மதுரையைச் சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகிய இருவரும் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், “கடந்த மாதம் 17-ந்தேதி மதுரை கோரிப்பாளையம் தர்கா முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ரஹமத்துல்லா என்பவர் நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த அடிப்படையிலேயே கோரிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த காரணத்தினால், எங்களையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இதே போல ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் முன்ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளில் நீதிபதி முரளிசங்கர் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தீர்ப்பளித்த கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. நீதிபதிகள் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் தங்களது பணிகளை செய்ய வேண்டும். அவர்கள் மிரட்டப்படுவார்களே ஆனால், அது ஜனநாயகத்தின் முக்கிய தூணான நீதித்துறையின் அடித்தளத்தை சிதைத்துவிடும். அந்த வகையில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்