நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வாழைக்கன்று நட்டு வைத்து நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
கரூர் மாவட்ட மைய தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாழைக்கன்று நட்டு வைத்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.