பரமத்திவேலூர், பொத்தனூர் பேரூராட்சியில் சொத்து வரி சீராய்வு கூட்டம்
பரமத்திவேலூர், பொத்தனூர் பேரூராட்சியில் சொத்து வரி சீராய்வு கூட்டம் நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பேரூராட்சியில் சொத்து வரி சீராய்வு கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜா, செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இதில் சொத்து வரி சீராய்வு தொடர்பான தீர்மானத்துக்கு 10 தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர், சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேர், தி.மு.க., பா.ம.க.வை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை.
இதேபோல் பொத்தனூர் பேரூராட்சியில் சொத்துவரி சீராய்வு செய்வது தொடர்பான அவசர கூட்டம் பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்பரசு, செயல் அலுவலர் கணேசன் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சொத்து வரி சீராய்வு செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த 10 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 5 வார்டு உறுப்பினர்கள் சொத்து வரி சீராய்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.