திருச்செங்கோட்டில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்; தரையில் கொட்டி நகராட்சி ஊழியர்கள் அழித்தனர்

திருச்செங்கோட்டில் காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்கள் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர்.

Update: 2022-04-08 18:27 GMT
எலச்சிபாளையம்:
காலாவதியான குளிர்பானங்கள்
திருச்செங்கோடு நகராட்சி பகுதி மற்றும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நலக்குறைவுகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையிலான ஊழியர்கள் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தனர்.
தரையில் கொட்டி அழிப்பு
அப்போது ஒரு கடையில் பிரபல நிறுவனங்களின் காலாவதியான குளிர்பானங்கள், சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள், சாக்லெட்டுகள், தின்பண்டங்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் குளிர்பானங்களை தரையில் கொட்டி அழித்தனர்.
மேலும் அங்கிருந்த ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான குளிர்பானங்கள், புகையிலை பொருட்களை விற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பரபரப்பு
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று அவர்கள் தெரிவித்தனர். நகராட்சி ஊழியர்களின் இந்த திடீர் ஆய்வால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்