இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் படகில் தப்பி தனுஷ்கோடி வந்த தம்பதி

இலங்கையில் இருந்து படகில் தப்பி குழந்தைகளுடன் ஒரு தம்பதி தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் கூறிய தகவல்கள் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

Update: 2022-04-08 18:25 GMT
ராமேசுவரம், 
இலங்கையில் இருந்து படகில் தப்பி குழந்தைகளுடன் ஒரு தம்பதி தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் கூறிய தகவல்கள் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. 
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்தது. இதனால் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இதன்காரணமாக சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து 2 படகுகளில் 16 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்- மனைவி மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர், நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர். இந்த 4 பேரை இறக்கிவிட்டு, அவர்களை அழைத்து வந்தவர்கள் படகுடன் மீண்டும் இலங்கைக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கையில் இருந்து அகதிகள் வந்து இறங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்களை வாகனத்தில் ஏற்றி மண்டபத்தில் உள்ள கடலோர காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
குழந்தைகளுடன் தப்பி வந்த தம்பதியிடம் மத்திய-மாநில உளவு பிரிவு, கியூ பிரிவு மற்றும் கடலோர போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், மன்னார் மாவட்டம் முத்தரப்புதுறை பகுதியை சேர்ந்த நிஷாந்த் பெர்னாண்டோ (வயது 34), அவருடைய மனைவி ரஞ்சிதா (29), இவர்களது குழந்தைகள் ஜெனிஸ்டா (10), ஆகாஷ் (2) என்பது தெரியவந்தது. 
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வேலை இல்லாததால் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
உருக்கம்
இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ரஞ்சிதா உருக்கமுடன் கூறியதாவது:- 
எனது கணவர் கடல் தொழில் செய்து வருகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடி படகுகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. 
இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.250, சீனி ரூ.250, கோதுமை மாவு பாக்கெட் ரூ.250, தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 1000 ரூபாய், காய்கறிகள் கிலோ ரூ.500 முதல் 800 வரையிலும், பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகள் ரூ.200 முதல் 300 வரையிலும் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
பல மணிநேரம் மின்வெட்டு
இலங்கையில் பல மணிநேரம் மின்வெட்டு ஏற்படுவதால் எந்த ஒரு தொழிலும் நடைபெறவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. முழுமையாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வறுமையில் இருக்கும் எங்களால் அங்கு உயிர்வாழ முடியாது. இதனால், கஷ்டப்பட்டு சொந்தமாக வாங்கிய வீட்டை உறவினர் ஒருவரிடம் ரூ.15 லட்சத்திற்கு விற்று விட்டு அந்த பணத்தில் பிள்ளைகளுக்கு இலங்கையில் 5 பவுன் தங்க நகைகள் வாங்கிவிட்டு மீதம் உள்ள பணத்தில் படகோட்டிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து கடல் வழியாக குடும்பத்தோடு இங்கு தப்பி வந்துள்ளேன். 
எனது உறவினர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதற்கு அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியது, சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்