பெங்களூரு தர்மபுரி இடையே மின்சார ரெயில் இயக்கம் தொடங்கியது

பெங்களூரு- தர்மபுரி இடையே மின்சார ரெயில் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது.

Update: 2022-04-08 17:55 GMT
தர்மபுரி:
பெங்களூரு- தர்மபுரி இடையே மின்சார ரெயில் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது.
மின்சார ரெயில் இயக்கம்
பெங்களூரு- ஓமலூர் இடையே உள்ள ரெயில்பாதையை மின்சார வழித்தடமாக மாற்றும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஏற்கனவே பெங்களூரு - ஓசூர் இடையே மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் பெங்களூரு- தர்மபுரி இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கியது. இதன்படி நேற்று காலை 7.30 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில், ஓசூர், மாரண்டஅள்ளி, பாலக்கோடு வழியாக தர்மபுரி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த மின்சார ரெயிலை பொதுமக்கள் வரவேற்றனர்.
இனிப்பு வழங்கினர்
இந்த ரெயில் நேற்று மாலை 4.20 மணிக்கு தர்மபுரி ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டது. அப்போது தர்மபுரி ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் வணிகர் சங்கத்தினர் ரெயில் என்ஜின் மீது பூக்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பின்னர் ரெயில் பயணிகள் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் ஜெபராஜ், தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட செயலாளர் கிரிதர், மாவட்ட பொருளாளர் ரவிசந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம், தென்மேற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பிரதீப்குமார், அரசு வக்கீல் சங்கர் உள்பட ரெயில் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்