முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது மேலும் ஒரு புகார்

கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது மேலும் ஒரு புகார் செய்யப்பட்டது.

Update: 2022-04-08 17:36 GMT
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தில் முகமது அலி என்பவர்  அறக்கட்டளை என்ற பெயரில் வழிபாட்டு தலம் கட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் போராட்டம் நடத்த ஊர்வலமாக சென்றனர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில், ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா வருகிற 13-ந்தேதிக்குள் வழிபாட்டு தலம் அகற்றப்படும் என்று எழுதி கொடுத்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்திற்கு வந்திருந்த எச்.ராஜா தமிழ்நாடு முதல்-அமைச்சர், அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டக் கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளை பற்றி அவதூறாக பேசியதாகவும் அதனால் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். அதே போல இன்று மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகத்தினர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். மேலும் இதே போல கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எச்.ராஜா மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது நடவடிக்கை இல்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர். எச்.ராஜா மீது அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் நிலையில் வழக்குப்பதிவு செய்வது குறித்து சம்பவத்தன்று எடுக்கப்பட்ட வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்