சிதம்பரம் பஸ்நிலையத்தில் பயணியிடம் பணம், செல்போன் திருட்டு வாலிபர் கைது

சிதம்பரம் பஸ்நிலையத்தில் பயணியிடம் பணம்,செல்போனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-08 17:34 GMT

சிதம்பரம், 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் பாஸ்கர் (வயது 29). பாஸ்கர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை ஊருக்கு திரும்பிய அவர், இரவு 2 மணிக்கு சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். 

அப்போது, கொள்ளிடத்துக்கு செல்ல, பஸ் வசதி இல்லாததால் பாஸ்கர் சிதம்பரம் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினார். அயர்ந்து தூங்கிய அவர் சிறிது நேரத்தில், எழுந்து பார்த்தார். அதில், அவரது சட்டைபையில் இருந்த ரூ.2 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை காணவில்லை. யரோ திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கதில் இருந்தவர்களிடம் இது பற்றி தெரிவித்தார். உடனே அந்த பகுதியில் யாரேனும் சந்தேகப்படும் படியாக நிற்கிறார்களா? என்று பார்த்தனர். 

அப்போது, சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பாஸ்கர் அங்கிருந்த சக பயணிகள் உதவியுடன் மடக்கி பிடித்து சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த வாலிபரிடம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை மேற்கொண்டார். அதில், அவர் அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டத்தை சேர்ந்த சுந்தரம் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (26) என்பதும், பாஸ்கர் அயர்ந்து தூங்கிய நேரத்தை பயன்படுத்தி அவரது சட்டை பையில் இருந்த ரூ. 2 ஆயிரம் மற்றும் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுபாஷ் சந்திரபோசை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்