திருமணமான 5 மாதங்களிலேயே புதுமணத்தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமான 5 மாதங்களிலேயே புதுமணத்தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே திருமணமான 5 மாதங்களிலேயே புதுமணத்தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுமண தம்பதி
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள தாயம்பாளையத்தை சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் ஆனந்த் (வயது 24). பனியன் நிறுவன தொழிலாளி. தொங்குட்டிபாளையம் அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் சிந்து (18). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதி குமாரபாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி அங்கு உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று காலை சிந்துவின் வீட்டிற்கு அவருடைய குடும்பத்தினர் வந்துள்ளனர். பின்னர் நீண்டநேரம் மகளிடம் பேசி விட்டு காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.
அதன்பின்னர் மதியம் 1 மணிக்கு சிந்துவின் அண்ணன் சிந்துவை பார்க்க வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து சிந்துவின் பெயரை சொல்லி கதவை திறக்குமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டினுள் தம்பதி இருவரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி துடித்தார். உடனே அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, தற்கொலை செய்யும் முன் கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளார்களா என்று அந்த அறை முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கடிதம் எதுவும் இல்லை. மேலும் தம்பதி இருவரின் செல்போனை கைப்பற்றி அவர்கள் கடைசியாக யாரிடம் பேசினார்கள், அப்போது அவர்களிடம் தற்கொலை செய்து கொள்வது குறித்து தகவல் ஏதும் தெரிவித்தார்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.