எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் புதுக்கோட்டைக்கு வந்தன பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் புதுக்கோட்டைக்கு வந்தன. பின்னர் அவைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
விடைத்தாள்கள்
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) நடைபெற உள்ளது. தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை, தேர்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கான விடைத்தாள்கள் வந்தன. அவை புதுக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு பிாித்து அனுப்பப்பட்டன.
அனுப்பும் பணி தீவிரம்
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குரிய விடைத்தாள்கள் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அந்தந்த தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு சரக்கு வேன் மூலம் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் வர உள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.