மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாததால் அலுவலர்களை பெற்றோர் முற்றுகை
விழுப்புரத்தில் நடந்த கபடி போட்டிக்கான உடற்தகுதி தேர்வில் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாததால் அலுவலர்களை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர் விளையாட்டு விடுதிகளில் அரசு சலுகைகளுடன் இலவசமாக தங்கி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பதற்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக விளையாட்டு போட்டித்தேர்வு வைத்து மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
விழுப்புரம், தேனி ஆகிய இடங்களில் உள்ள மாணவர் விளையாட்டு விடுதிகள் மற்றும் நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ- மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வுப்போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது.
கபடி போட்டிக்கான தேர்வு
அந்த வகையில் கபடி போட்டிக்கான தேர்வு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. கடந்த 6-ந் தேதி 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நேற்று முன்தினம் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கபடி போட்டி தேர்வு நடந்து முடிந்த நிலையில் நேற்று 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான கபடி போட்டித்தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் கலந்துகொள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். இவர்களில் தற்போது 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் பலரும் தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாக கூறி கலந்துகொண்டனர்.
அலுவலர்களை முற்றுகை
இந்நிலையில் மாணவர்களுக்கு நடைபெறும் உடற்தகுதி தேர்வில் தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க தகுதியுடையவர்கள் என்றும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உடல்தகுதி தேர்வுக்கு தகுதியில்லை என விளையாட்டு தேர்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், அங்கிருந்த விளையாட்டு தேர்வு அலுவலர்களை முற்றுகையிட்டு தேர்வு நடத்தக்கோரி அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த மாணவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், பள்ளி மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் விளையாட்டு மைதானத்தில் நீண்ட நேரம் அமர வைக்கப்பட்டு உடற்தகுதி தேர்வினை அதிகாரிகள் நடத்துவதால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர்களது பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார், அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மைதானத்தை விட்டு கலைந்து போகச்செய்தனர்.
அதன் பிறகு 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கபடி போட்டிக்கான தேர்வு நடந்தது. இருப்பினும் கண்துடைப்பிற்காக இந்த உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டதால் அம்மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.