வாழையில் நோய் தாக்குதல் அதிகரிப்பு
கூடலூர் பகுதியில் வாழையில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கம்பம்:
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவு வாழை விவசாயம் செய்யப்படுகிறது. இதில் கூடலூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் வாழை மரத்தில் தண்டு வெடிப்பு நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து லக்னோ இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) நோயியல் பேராசிரியர் தாமோதரன் தலைமையிலான குழுவினர் கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் நோய் தாக்குதலுக்குள்ளான வாழை தோட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.