மணவாளக்குறிச்சியில் 7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

மணவாளக்குறிச்சி அருகே 7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-08 15:11 GMT
குளச்சல், 
மணவாளக்குறிச்சி அருகே 7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மாணவி பலாத்காரம்
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பரப்பற்று இளந்தோப்புவிளையை சேர்ந்தவர் குமார் (வயது 29). இவர் முட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 
குழித்துறை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, மணவாளக்குறிச்சி அருகே தனது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து குமார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விவரத்தை மாணவி, பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
தொழிலாளி கைது
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு மாணவியிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி விசாரணை நடத்தி குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். 7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியதாக வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்