கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பியர்சோலா அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதி வன அலுவலர் பேட்டி
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பியர்சோலா அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கூறினார்.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலா பயணிகள் வருகையை கருத்தில்கொண்டு மாவட்ட வனத்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக மன்னவனூரில் உள்ள சுற்றுச்சூழல் மையத்தில் ரோப்கிளைமிங் எனப்படும் கயிறு கட்டி செல்லுதல், ஹைகிங்ஸ், வாலிபால் விளையாட்டு மைதானம், இறகுப்பந்து விளையாட்டு மைதானம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பரிசல்சவாரி செய்வதற்காக கூடுதலாக 4 பரிசல்கள் வாங்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 மைல் சுற்றளவுள்ள மோயர்பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பைன் மரக்காடுகள் போன்ற பகுதிகளில் அலங்கார வளைவுகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி, பயோகழிப்பறை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடங்கள் கூடுதலாக பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.
தற்போது பேரிஜம் ஏரியை சுற்றி பார்ப்பதற்கு தினமும் 50 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனைஅதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் நாளை(சனிக்கிழமை) முதல் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மூடப்படும். வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் குரங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவை புதிதாக அமைத்து கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற பியர்சோலா அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதி அளிக்கப்படும். மலைப்பகுதியில் கஞ்சா பயிரிடுவதை தடுப்பதற்காக மாதந்தோறும் வனத்துறை ஊழியர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். போதை காளான் வைத்திருப்பது, கூடாரங்கள் அமைப்பது போன்றவை சட்டப்படி குற்றமாகும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.