தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

Update: 2022-04-08 14:51 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 தாலுகா மற்றும் துணை தாலுகா மருத்துவமனைகள், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘நம் மருத்துவமனை மகத்துவமான மருத்துவமனை’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தநிலையில் அந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது, நமது மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும். கழிப்பறை, குளியலறைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தேவையற்ற கழிவு பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். நாம் பணிபுரியும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.  

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் சோலை மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். இதையடுத்து மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள், ஊட்டி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் குப்பைகளை அகற்றியும், புதர் செடிகளை அப்புறப்படுத்தியும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனை முன்பு உள்ள பூங்கா சுத்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்