ஆதரவற்ற குழந்தைகள் பெயரை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல்
ஆதரவற்ற குழந்தைகள் பெயரை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்து நூதன மோசடி செய்யப்படுகிறது. இதனால் ஊட்டியில் பரபரப்பு நிலவுகிறது.
ஊட்டி
ஆதரவற்ற குழந்தைகள் பெயரை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்து நூதன மோசடி செய்யப்படுகிறது. இதனால் ஊட்டியில் பரபரப்பு நிலவுகிறது.
குழந்தைகள் காப்பகம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களை குறி வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.
இந்தநிலையில் இன்று 2 இளம்பெண்கள் பூங்காவுக்குள் நுழைந்தனர். அவர்கள், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வருவதாகவும், அதற்கு இயன்ற பண உதவி செய்யுங்கள் என்றும் கூறி சுற்றுலா பயணிகளிடம் சில ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை காண்பித்தனர். அந்த புகைப்படங்களில் குழந்தைகள் உணவு சாப்பிடுவது, விளையாடுவது, பாடம் படிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
போலி ஆவணங்கள்
அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகம் என்றும், அங்குள்ள குழந்தைகளை பராமரிக்க தினமும் பண உதவி செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறி நடித்தனர். இதனை நம்பிய சுற்றுலா பயணிகள் ரூ.500 முதல் ரூ.1,000 வரை நன்கொடையாக கொடுத்தனர். எனினும் அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த தோட்டக்கலை அலுவலர்கள் உடனடியாக 2 இளம்பெண்களையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கொடுத்த காப்பகத்தின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது.
இது தவிர அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதும், பூங்காவுக்குள் டிக்கெட் எடுக்காமல் நுழைந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே தோட்டக்கலைத்துறையினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அச்சம் அடைந்த அந்த 2 இளம்பெண்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
ஏமாற வேண்டாம்
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகள், மத வழிபாட்டு தலங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதாக கூறி பணம் வசூலித்தது தெரியவந்தது. அவர்கள் பொருளுதவி பெறாமல் வங்கி கணக்கு மற்றும் நேரடியாக பணம் பெற்றதும், ஆவணத்தில் குறிப்பிட்ட முகவரியில் காப்பகமே இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்கு பின்னால் ஏதேனும் கும்பல் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்களிடம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஊட்டியில் கோடை சீசன் தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளை குறி வைத்து நூதன மோசடி நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.