5 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’ வைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 5 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-08 14:31 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 5 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
109 டாஸ்மாக் கடைகள்
திருவாரூர் மாவட்டத்தில் 109 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 40 கடைகளில் மட்டுமே உரிமம் பெற்ற பார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 
அரசின் உத்தரவுப்படி உரிமம் இல்லாமல் இயங்கும் பார்கள் கண்டறியப்பட்டு அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மூலம் அந்த கடைகளின் பார்களுக்கு பூட்டி ‘சீல்’ வைக்கும் பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட தலைமையில் போலீசார் உதவியுடன் கடந்த மாதம் 31-ந் தேதி அனுமதியின்றி இயங்கி வந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். 
‘சீல்’ வைக்கும் பணி 
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் அனுமதியின்றி இயங்கும் பார்கள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த பார்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி நடந்தது. 
அதன்படி திருத்துறைப்பூண்டி, மாங்குடி, நடுகளப்பால், மடப்புரம் மற்றும் திருவாரூர் தாலுகா சேமங்கலம் ஆகிய 5 டாஸ்மாக் கடைகள் அருகே உரிமம் இல்லாமல் அனுமதியின்றி பார்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது. 
3 பேர் கைது 
அதனை தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்திபிரேம்சந்தர் மற்றும் மதுவிலக்கு போலீசார் முன்னிலையில் அலுவலர்கள் நேற்று 5 டாஸ்மாக் பார்களை பூட்டி ‘சீல்’ வைத்தனர். 
இதில் தொடர்புடைய டாஸ்மாக் பார்களின் உரிமையாளரான திருத்துறைப்பூண்டி அய்யப்பன்(வயது 35), மாங்குடி சாமிக்கண்ணு(58), சேமங்கலம் ரமேஷ்(49) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
மேலும் தலைமறைவாக உள்ள 2 டாஸ்மாக் பார்களின் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
எச்சரிக்கை 
இதுபோன்று உரிமம் பெறாமல் அனுமதியின்றி இயங்கும் பார்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள்.   எனவே உரிமம் இல்லாமல் அனுமதியின்றி பார்களை நடத்த வேண்டாம் என மாவட்ட மேலாளர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்