போக்குவரத்து கழக ஊழியர்கள் சரத்பவார் வீடு முன்பு போராட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று சரத்பவாரின் வீட்டு முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-08 13:16 GMT
படம்
மும்பை, 
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று சரத்பவாரின் வீட்டு முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 வேலை நிறுத்தம் 
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து கழகங்களில் ஒன்றான மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் 90 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். 
இந்த நிலையில் நஷ்டத்தில் இயங்கிவரும் போக்குவரத்து கழகத்தை மாநில அரசுடன் இணைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அரசு போராட்டத்தை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் ஒருபகுதி ஊழியர்கள் மட்டுமே இதுவரை பணிக்கு திரும்பி உள்ளனர். 
திடீர் போராட்டம் 
இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டு வருகிற 22-ந் தேதிக்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் ஐகோர்ட்டு கூறியது. 
கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து போக்குவரத்து மந்திரி அனில் பரப்பும் மீண்டும் பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ளார். 
இந்த நிலையில் தெற்கு மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் இல்லமான ‘சில்வர் ஓக்’ முன்பு கூடிய மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் சரத்பவாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 
சில ஊழியர்கள் தங்கள் காலணிகளை அவரது வீட்டை நோக்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் கூறியதாவது:- 
சரத்பவார் சிக்கலை தீர்க்கவில்லை
 வேலை நிறுத்த போராட்டத்தின் போது சுமார் 120 மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளனர். இவை தற்கொலைகள் அல்ல. அரசின் கொள்கையால் ஏற்பட்ட கொலைகள். மாநில போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த பிரச்சினையில் தலையிட்டு சிக்கலை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இவ்வாறு அவர் கூறினார். 
மற்றொரு ஊழியர் கூறுகையில், “மும்பை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் நாங்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம், அரசு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த அரசின் சாணக்கியரான சரத்பவாரும் எங்களின் இந்த இழப்புக்கு பொறுப்பாவார்” என்றார். 
-------------------

மேலும் செய்திகள்