திருப்பத்தூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறுத்தி வைப்பு

திருப்பத்தூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் தமிழக அரசு அறிவித்த சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-04-08 12:32 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் தமிழக அரசு அறிவித்த சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நகராட்சி கூட்டம்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகள், செய்ய வேண்டிய பணிகள்  குறித்து பேசினர். நகராட்சி அலுவலகம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

கூட்டத்தில் தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி, காலி மனை வரியை சீராய்வு செய்து புதிய வரி நிர்ணயம் செய்ய வேண்டிய தீர்மானம் படிக்கப்பட்டது. அப்போது குட்டி என்கின்ற சீனிவாசன், சுதாகர், (தி.மு.க.), டி.டி.சி. சங்கர், ராணி சதீஷ் (அ.தி.மு.க.), சரவணன் (ம.தி.மு.க.) உள்பட பல்வேறு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிறுத்தி வைப்பு

நகராட்சி முதல் கூட்டம் என்பதால் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என அவர்கள் கூறினார்கள். அதற்கு ஆணையாளர் கூறுகையில் தமிழக அரசு அறிவித்த சொத்து வரி மற்றும் காலிமனை வரியை சீராய்ரு செய்து, புதிய வரிக்கு தீர்மானம் நிறைவேற்றி 13-ந்் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

அதற்கு முதல் கூட்டத்தில் இந்த தீர்மானம் தேவை இல்லை, கொரோனாவால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு பணப்புழக்கம் இல்லாமல் உள்ளனர். தமிழக அரசு வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால் அவசர கூட்டம் கூட்டி அந்த தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றனர்.
அதைத்தொடர்ந்து அந்த தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாக ஆணையாளர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்