சட்டவிரோத கருக்கலைப்பு 2 போலி டாக்டர்கள் கைது

சட்டவிரோத கருக்கலைப்பு செய்த 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-08 12:14 GMT
கோப்பு படம்
புனே, 
கோலாப்பூர் மாவட்டம் பன்ஹாலா தாலுகா பதல் பகுதியில் அர்ஷல் நாயக் என்பவர் நடத்தும் கிளினிக்கில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெண் போலீஸ் ஒருவரை சாதாரண உடையில் நோயாளிபோல் இந்த கிளினிக்கிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த பெண் டாக்டர் அர்ஷல் நாயக்கிடம் தனது கருவை கலைக்க விரும்புவதாக கூறினார். இதையடுத்து அர்ஷல் நாயக் அந்த பெண்ணை ரங்கலாவில் உள்ள டாக்டர் உமேஷ் பவாரிடம் அனுப்பி வைத்தார். 
 உமேஷ் பவார் அந்த பெண்ணின் கருவை கலைக்க ரூ.5 ஆயிரம் கட்டணமாக பெற்றுக்கொண்டதுடன் 3 கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் பவுடர் ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்தார். 
 இதன்மூலம் அங்கு கருக்கலைப்பு நடப்பதை உறுதி செய்துகொண்ட பெண் போலீஸ் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அந்த கிளினிக்குகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய அர்ஷல் நாயக், உமேஷ் பவார் மற்றும் அவருகளுக்கு இடைத்தரகராக வேலை செய்த நபர் உள்பட 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் மருத்துவ சான்றிதழ் இல்லை. இதன்மூலம் அவர்கள் போலி டாக்டர்கள் என்பது தெரியவந்தது. 
இவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்