கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்:தலை சிதறி நாய் செத்தது-வெடி வைத்து கொல்லப்பட்டதா? போலீஸ் தீவிர விசாரணை
கிருஷ்ணகிரி அருகே தலை சிதறி நாய் செத்தது. அந்த நாய் வெடி வைத்து கொல்லப்பட்டதா? என போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது மண்ணு குட்டை கிராமம். இந்த ஊரில் பிரபு டேவிட் என்பவருக்கு சொந்தமான பேட்டரி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஜெர்மன் நாட்டு இனத்தைச் சேர்ந்த 4 வயதுடைய லேபேட் நாய் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நாய் இரவு மற்றும் பகல் நேரங்களில் பேட்டரி ஆலையை சுற்றி பாதுகாப்பு பணியில் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு நாய் பேட்டரி தயாரிப்பு அறையில் முன்புறம் நீண்ட நேரம் குரைத்துக்கொண்டு இருந்துள்ளது. இதைக்கண்ட ஆலை உரிமையாளர் பிரபு டேவிட், டார்ச்லைட் மூலமாக ஆள் நடமாட்டம் இருக்கிறதா என கண்காணித்தார். நேற்று அதிகாலை 1 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்து சிதறியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு டேவிட், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அந்த நேரம் நாய் தலை சிதறி உருக்குலைந்து இறந்து கிடந்தது. இது குறித்து பிரபு டேவிட், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் தனக்கும், மற்றொருவருக்கும் நிலப்பிரச்சினை உள்ளதாகவும், அதை மனதில் வைத்துக்கொண்டு அவர் தனது வளர்ப்பு நாய்க்கு வெடி வைத்த கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, அமர்நாத் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீஸ் மோப்ப நாய் பைரவி சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டது. அது நாய் இறந்து கிடந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. அதே போல தடயவியல் நிபுணர்களும் சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து நாயின் உடல் கால்நடை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை (சி.சி.டி.வி.) பார்த்த போது நாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி இறந்திருப்பது தெரிய வந்தது. அந்த நாய் வெடி வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.