தி.மு.க. அரசு 5 ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்காது
ேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றாவிட்டால் தி.மு.க. அரசு 5 ஆண்டு காலம் தாங்காது என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
விருதுநகர்,
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றாவிட்டால் தி.மு.க. அரசு 5 ஆண்டு காலம் தாங்காது என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக அரசு அதிகபட்ச தண்டனையை பெற்று தர வேண்டும். அதன் மூலமே தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை நடக்காத நிலை ஏற்படும். பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட தி.மு.க. பிரமுகரை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. இது என்ன தண்டனை? அவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டாமா?
தேர்தல் வாக்குறுதி
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரவில்லையென்றால் தமிழக பெண்கள் போர்க்கொடி தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரமாகி விட்டது. இது நடுத்தர சாமானிய மக்களை பாதித்து விட்டது. தேர்தலின் போது தி.மு.க. பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். அதை கொடுத்தார்களா?. பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை. எனவே தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாவிட்டால் தி.மு.க. அரசு 5 ஆண்டுகளுக்கு தாங்காது.
சொத்து வரி உயர்வு
25 சதவீதம் உயர்த்த வேண்டிய சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள். இதற்கு மத்திய அரசு காரணம் என்று கூறுகிறார்கள். மத்திய அரசு என்ன கூறி உள்ளது என்று தெளிவாக சொல்ல வேண்டாமா. மக்களை ஏமாற்றாதீர்கள். மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அனைத்து விவரங்களையும் கூறியதோடு, தைரியம் இருந்தால் பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து என்னை கைது செய்யட்டும் என்றும் கூறினார். பின்னர் இருவரும் அமைதியாகி விட்டனர்.
அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது.. இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது.
இவ்வாறு இவர் கூறினார்.