பெருந்துறை அருகே தாய் கண் முன் பரிதாபம்: வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி சாவு; சிறுமி உடல் மீட்பு

பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பரிதாபமாக இறந்தனர். தாய் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-04-07 21:22 GMT
பெருந்துறை
பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பரிதாபமாக இறந்தனர். தாய் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அக்காள்-தம்பி
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சாவித்திரி என்கிற சந்தியாதேவி (32). இவர்களுக்கு கீர்த்தனா (10) என்கிற மகளும், பரணீதரன் (3) என்ற மகனும் இருந்தனர்.
இதில் கீர்த்தனா 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சாவித்திரி துணி துவைப்பதற்காக நேற்று மாலை  காஞ்சிக்கோவில் அருகே செல்லும் சூரியன் காடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். உடன் தன்னுடைய மகனையும், மகளையும்  அழைத்து  சென்றுள்ளார்.
சாவு
பின்னர் சாவித்திரி வாய்க்காலின் படிக்கட்டில் உட்கார்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். கீர்த்தனாவும், பரணீதரனும் அவரது முன்பு வாய்க்காலின் கரையில் உட்கார்ந்திருந்தனர். அது சரிவாக இருந்ததால் திடீரென 2 பேரும் வாய்க்காலுக்குள் தவறி விழுந்துவிட்டனர்.
வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்றதால் 2 பேரும் இழுத்து செல்லப்பட்டனர். 
இதைப்பார்த்த தாய் சாவித்திரி அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது குழந்தைகளை காப்பாற்ற அவரும் வாய்க்காலுக்குள் இறங்கினார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் தன்னை காப்பாற்றிக்கொள்ள கரையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பிடித்துக்கொண்டு, “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார்.
சிறுமி உடல் மீட்பு
சத்தம் கேட்டு அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் அங்கு வந்தனர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சாவித்திரியை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட கீர்த்தனா, பரணீதரனின் உடலை பொதுமக்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 
இதில் கண்ணவேலம்பாளையம் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கீர்த்தனாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பரணீதரன் உடலை தேடி பார்த்தார்கள். ஆனால் இரவு வரை தேடியும் அவனது உடல் கிடைக்கவில்லை.  வாய்க்காலில் மூழ்கி இறந்த பரணீதரன் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சோகம்
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் விசாரணை நடத்தி வருகிறார். தான் பெற்ற 2 குழந்தைகளும், தாய் கண் முன்னே வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்