வரலாற்று சிறப்பு மிக்க பெங்களூரு கரக திருவிழா இன்று தொடக்கம்
பெங்களூரு தர்மராயசாமி கோவில் கரக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மஸ்தான் ஷாப் தர்காவுக்கு கரக ஊர்வலம் செல்லும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு:
கரக திருவிழா
பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே தர்மராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பல நூறு ஆண்டுகளாக தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கரக திருவிழா எளிமையாக நடந்தது. இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
வருகிற 16-ந் தேதி சிறப்பு வாய்ந்த கரக ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். கர்நாடகத்தில் தற்போது ஹிஜாப், ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், தர்மராயசாமி கோவிலில் நடைபெறும் கரக ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் கே.ஆர்.சர்க்கிளில் உள்ள மஸ்தான் ஷாப் தர்காவுக்கு செல்வது வழக்கம்.
முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை
பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. தற்போது ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால், கரக ஊர்வலம் மஸ்தான் ஷாப் தர்காவுக்கு செல்லக்கூடாது என்று இந்து அமைப்புகள் தெரிவித்தார்கள். இதையடுத்து, மஸ்தான் ஷாப் தர்காவின் மவுல்வி மற்றும் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் தர்மராயசாமி கோவிலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசினார்கள்.
அப்போது கரக ஊர்வலம் பல நூறு ஆண்டுகளாக மஸ்தான் ஷாப் தர்காவுக்கு செல்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நடைமுறை தொடர வேண்டும். இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக தர்காவுக்கு கரக ஊர்வலம் வராமல் இருக்க கூடாது. கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை இனியும் தொடர வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளுக்கு, முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கோவில் நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர்.
தர்காவுக்கு ஊர்வலம் செல்லும்
இதுகுறித்து தர்மராயசாமி கோவில் நிர்வாகி சதீஸ் நிருபர்களிடம் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க கரக திருவிழாவின் போது கரக ஊர்வலம் மஸ்தான் ஷாப் தர்க்காவுக்கு செல்வது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும் கரக ஊர்வலம் மஸ்தான் ஷாப் தர்க்காவுக்கு செல்லும். இந்த நடைமுறைகள் எதுவும் மாற்றம் செய்யப்படாது, என்றார்.
2 ஆண்டுக்கு பின்பு இன்று தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா தொடங்கி நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.