‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்தும்போது அவர்கள் நிலை தடுமாறி கிழே விழுந்து காயம் அடைகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவி, இளையான்குடி.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் குழந்தைகள், முதியோர் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குபேந்திரன், திருப்பரங்குன்றம்.
பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஸ் நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. பயணிகளுக்கான இருக்கயைில் சிலர் படுத்து உறங்குகின்றனர். இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் பஸ் நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுப்பார்களா?
பிரணவ், ராஜபாளையம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் பெரியகருப்பன் நகர் வடக்கு புதுதெரு பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இ்ந்த பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்பட வாய்பு உள்ளது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செல்லயன், ராமநாதபுரம்.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
மதுரை மாவட்டம் செனாய் நகர் பகுதியில் சிவ சண்முகம் ரோட்டில் சாலை அமைப்பதற்காக சரள்கற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாகியும் தார் சாலை பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாத நிலை உள்ளது. சரள் கற்கள் மீது இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துகளும் ஏற்படுகின்றது. அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துமணி, காந்தி நகர்.
மின்தடை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய வேலைகள் பாதிக்கப்படுகின்றது. தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் இரவு நேரங்களில் கல்வி பயில முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தடையின்றி மின்வினியோகம் செய்வார்களா?
செல்வா, விருதுநகர்.