திருசுதந்திரர்கள் குறித்து அறநிலையத்துறை கமிஷனரின் உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
திருச்செந்தூர் கோவிலில் உள்ள திருசுதந்திரர்கள் குறித்து அறநிலையத்துறை கமிஷனரின் உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
மதுரை,
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், திருச்செந்தூர் கோவிலில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின்படி கைங்கர்யம் செய்வதற்காக அடையாள அட்டை பெறுவதற்காக திருசுதந்திரர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரி, காவல்துறை சான்றுகளுடன், ஒழுங்கீனமாக நடந்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழி அளித்து விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் திருசுதந்திரர்கள் தனிப்பட்ட முறையில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக்கூடாது. பக்தர்களிடம் சண்டை, சச்சரவில் ஈடுபடக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் ஸ்ரீ ஜெயந்திநாதர் திருசுதந்திரர்கள் காரியஸ்தர் ஸ்தானிகர் சபை செயலாளர் நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த கோவிலில் திருசுதந்திரர்களுக்கு பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் கைங்கர்யம் செய்யும் உரிமையை நிலை நாட்டுவதற்கு உரிமை உள்ளது. எனவே இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் நேற்று விசாரித்தனர். முடிவில், இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.