சொத்து வரி உயர்வை கண்டித்து தே.மு.தி.க. 11-ந்தேதி ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து அனைத்து மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதுரையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மதுரை,
சொத்து வரி உயர்வை கண்டித்து அனைத்து மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதுரையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினையை உணராமல் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறது. எனவே மக்களை பாதிக்கும் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் அனைவரின் கருத்தும் நீட் வேண்டாம் என்பதுதான். கவர்னரிடம் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் டெல்லிக்கு கொடுக்கவில்லை. ஆளுங்கட்சி மக்களை குழப்பக் கூடாது. நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு, குற்றங்களை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பெண்களும் தங்களுடைய சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களுக்கும் அந்த பொறுப்புணர்வு வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
முதல்- அமைச்சரின் துபாய் பயணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சுற்றுலா என்கிறார்கள். முதலீட்டை அதிகரிக்க சென்றதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு நல்லது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11-ந்தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க. சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்த்தலாம். ஆனால் 150 சதவீதம் என்பது ஒட்டுமொத்த மக்களும் தாங்க முடியாத சுமை. ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளது. எனவே சொத்து வரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர்
மேலும், விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து விருதுநகரில் நேற்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.