புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
அவினாசி அருகே புகையிலை பொருட்கள் கடத்திய கார் விபத்தில் சிக்கியது. இது தொடர்பாக 2 பேைர போலீசார் கைது செய்தனர்.
அவினாசி
அவினாசி அருகே புகையிலை பொருட்கள் கடத்திய கார் விபத்தில் சிக்கியது. இது தொடர்பாக 2 பேைர போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
விபத்தில் சிக்கிய காரில் புகையிலை பொருட்கள்
சேலத்திலிருந்து ஒரு கார் சேலம்-கோவை நெடுஞ்சாலையில் நேற்று கோவை நோக்கி சென்றது. அந்த கார் அவினாசியை அடுத்த எம்.நாதம்பாளையம் பிரிவு அருகே வந்தது. அந்த கார் முன்னால் சென்ற மற்றொரு காரை முந்த முயன்றுள்ளது. அப்போது இரண்டு கார்களும் பக்கவாட்டில் மோதியது. இதனால் 2 கார்களிலும் பயணம் செய்தவர்களும் கார்களை நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். இது குறித்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர்.
அப்போது ஒரு காரிலிருந்த 2 பேர் இறங்கி ஓடியுள்ளனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் காரின் டிக்கி மற்றும் பின்சீட்டிலும் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 150 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் பனமரத்துப் பட்டியை சேர்ந்த சின்னையன் மகன் சந்தோஷ் (வயது 31), மற்றும் கணேசன் மகன் பூபாலன் (23) என்பதும், இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஹான்ஸ், பான்மசாலா, குட்கா கணேஷ், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாங்கி கோவையில் விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
2 பேர் கைது
இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.